
பின்வரும் பகுதியை படிக்கவும் அல்லது கேட்கவும்
யோவான் ஸ்நானகன்
3:1அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் பாலைவனப் பகுதியில் வந்து, 2“மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” எனப் பிரசங்கித்தான். 3“ ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்,என்று இறைவாக்கினன் ஏசாயாவின் மூலம் கூறப்பட்டவன் இவனே.
4யோவானின் உடைகள் ஒட்டக முடியினால், செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது. 5மக்கள் எருசலேமிலிருந்தும், யூதேயா முழுவதிலிருந்தும், யோர்தான் பகுதி முழுவதிலிருந்தும் அவனிடம் சென்றார்கள். 6அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்கு பெற்றார்கள்.
7அப்பொழுது, அநேக பரிசேயரும் சதுசேயரும் திருமுழுக்கு கொடுக்கும் இடத்திற்கு வருவதை யோவான் கண்டு அவர்களிடம் சொன்னதாவது: “விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடும்படி உங்களை எச்சரித்தது யார்? 8நீங்கள் மனந்திரும்பியிருந்தால், அதற்கேற்ற கனியைக் காண்பியுங்கள். 9‘ஆபிரகாம் எங்களுக்கு தகப்பனாக இருக்கிறார்’ என்று உங்களால் சொல்லமுடியும் என நினைக்கவேண்டாம். இந்தக் கற்களிலிருந்துங்கூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க இறைவனால் முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 10கோடாரி ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது, நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.
11“நான் மனந்திரும்புதலுக்கென்று தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் என்னிலும் வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். அவரது பாதரட்சைகளைச் சுமக்கக்கூட நான் தகுதியற்றவன். அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் திருமுழுக்கு கொடுப்பார். 12அவர் தமது கரத்தில் தூற்றுக்கூடை ஏந்தி, தமது களத்தைச் சுத்தம் செய்வார். அவர் தன் தானியங்களை களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணைந்து போகாத நெருப்பில் எரித்துப்போடுவார்” என்றான்.
இயேசுவின் திருமுழுக்கு
13அப்பொழுது இயேசு, கலிலேயாவிலிருந்து யோவானால் திருமுழுக்கு பெறும்படி யோர்தானுக்கு வந்தார். 14ஆனால் யோவான் அவரிடம், “நான் உம்மிடம் திருமுழுக்கு பெற வேண்டியிருக்க, நீர் என்னிடம் வருகிறீரா?” என்று சொல்லி, அவரைத் தடுக்க முயற்சித்தான்.
15அதற்கு இயேசு, “இப்பொழுது இடங்கொடு; இவ்விதமாக எல்லா நீதியையும் முழுவதுமாய் நிறைவேற்றுவது நமக்குத் தகுதியாய் இருக்கிறது” எனப் பதிலளித்தார். அப்பொழுது யோவான் அதற்கு ஒப்புக்கொண்டான்.
16இயேசு திருமுழுக்கு பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே பரலோகம் திறக்கப்பட்டு, இறைவனின் ஆவியானவர் ஒரு புறாவைப்போன்று இறங்கி, அவர்மேல் அமர்வதைக் கண்டார். 17அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு குரல், “இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன்; இவரில் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்று உரைத்தது.
இயேசு இறைவனின் ஆட்டுக்குட்டி
1:29மறுநாளிலே இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகிறவர். 30‘எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். அவர் எனக்கு முன்னமே இருந்தார்’ என்று நான் இவரைக் குறித்தே சொன்னேன். 31நானும் அவரை அறியாதிருந்தேன். அவரை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தவே, நான் வந்து தண்ணீரில் திருமுழுக்கு கொடுத்தேன்” என்றான்.32பின்பு யோவான் இந்த சாட்சியை சொன்னான்: “பரலோகத்திலிருந்து ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்கி, இயேசுவின்மேல் அமர்வதைக் கண்டேன். 33தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் எனக்குச் சொல்லியிருக்காவிட்டால், நானும் அவரை அறிந்திருக்கமாட்டேன். என்னை அனுப்பினவரோ, ‘பரிசுத்த ஆவியானவர் இறங்கி யார்மீது தங்குவதை நீ காண்கிறாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுக்கிறவர்’ என்று சொல்லியிருந்தார். 34இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன் என்று சாட்சி கூறுகிறேன்” என்றான்.
சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு கதையை உங்கள் சொற்களில் மீண்டும் சொல்லுங்கள். நீங்கள் அதை சத்தமாகப் பேச விரும்பலாம், அல்லது அதை எழுதிக்கொள்ளலாம். அதை நினைவில் கொள்ள சிரமப்படுகிறீர்கள் என்றால், அதை மீண்டும் படிக்கவோ கேட்கவோ செய்யுங்கள்.
நீங்கள் கதை பற்றி பரிச்சயமாக உணரும்போது, கீழ்க்கண்ட கேள்விகளை சிந்திக்க அல்லது விவாதிக்க சில நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
Get Discovery Bible Studies on your phone
Discover copyright ©2015-2026 discoverapp.org
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™. பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™, Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. “Biblica” என்பது Biblica, Inc. மூலம் யுனைடெட் ஸ்டேட்ஸ் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை. அனுமதியுடன் பயன்படுத் தப் படுகிறது.