
பின்வரும் பகுதியை படிக்கவும் அல்லது கேட்கவும்
மறுபிறப்பைப் பற்றிய போதனை
3:1பரிசேயர்களில் நிக்கொதேமு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் யூத ஆளுநர் குழுவின் உறுப்பினரில் ஒருவன். 2அவன் ஒரு இரவிலே இயேசுவினிடத்தில் வந்து, “போதகரே, நீர் இறைவனிடத்திலிருந்து வந்த ஒரு போதகர் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில் இறைவன் ஒருவரோடு இல்லாவிட்டால், நீர் செய்கிற அடையாளங்களைச் செய்யமுடியாது” என்றான்.3இயேசு அதற்குப் பதிலாக, “ஒருவர் மறுபடியும் பிறக்காவிட்டால், இறைவனுடைய அரசை அவரால் காணமுடியாது என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
4அப்பொழுது நிக்கொதேமு இயேசுவிடம், “வயதான ஒருவர் மீண்டும் பிறப்பது எப்படி? அவர் மீண்டும் பிறப்பதற்காக, தமது தாயின் கர்ப்பத்தில் இரண்டாவது முறை போகமுடியாதே” என்றான்.
5இயேசு அதற்குப் பதிலாக, “மெய்யாகவே மெய்யாகவே, ஒருவர் தண்ணீரினாலும் ஆவியானவரினாலும் பிறவாவிட்டால், அவர் இறைவனுடைய அரசுக்குள் செல்லமுடியாது என்று நான் உனக்குச் சொல்கிறேன். 6மாமிசம், மாமிசத்தைப் பிறப்பிக்கிறது. ஆனால் ஆவியானவரோ, ஆவியை பிறப்பிக்கிறார். 7‘நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்’ என்று நான் உனக்குச் சொன்ன வார்த்தையைக் குறித்து நீ வியப்படையக் கூடாது. 8காற்று தான் விரும்பிய இடத்தை நோக்கியே வீசுகிறது; அதன் சத்தத்தைக் கேட்கிறீர்கள். ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றோ, அது எங்கே போகிறது என்றோ உங்களால் சொல்லமுடியாது. ஆவியானவரால் பிறந்த ஒவ்வொரு பிறப்பும் இப்படியே” என்றார்.
9அப்பொழுது நிக்கொதேமு, “இது எப்படி ஆகும்?” என்று கேட்டான்.
10இயேசு அவனிடம், “நீ இஸ்ரயேலரில் போதகனாய் இருக்கிறாயே, உன்னால் இவைகளை விளங்கிக்கொள்ள முடியவில்லையா? 11நான் உனக்கு மெய்யாகவே மெய்யாகவே சொல்கிறேன், நாங்கள் அறிந்ததைப் பேசுகிறோம். நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி சொல்கிறோம். ஆனால் நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். 12பூமிக்குரிய காரியங்களைக்குறித்தே நான் உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் அதை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்; அப்படியிருக்க பரலோக காரியங்களைக்குறித்து நான் பேசினால், அதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? 13பரலோகத்திலிருந்து வந்த மானிடமகனாகிய என்னைத்தவிர, ஒருவரும் ஒருபோதும் பரலோகத்திற்குள் சென்றதில்லை. 14பாலைவனத்திலே மோசே பாம்பை உயர்த்தியதுபோல, மானிடமனாகிய நானும் உயர்த்தப்பட வேண்டும். 15அப்போது மானிடமகனாகிய என்மீது விசுவாசமாயிருக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.”
16இறைவன் தமது ஒரே மகனை ஒப்புக்கொடுத்து அவரில் விசுவாசிக்கிற ஒருவரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி இவ்வளவாய் உலகத்தினரை அன்புகூர்ந்தார். 17உலகத்தைக் குற்றவாளி என்று தீர்ப்பதற்காக இறைவன் தமது மகனை அனுப்பாமல், தமது மகனின் மூலமாய் உலகத்தவர்களை இரட்சிப்பதற்காகவே அனுப்பினார். 18இறைவனுடைய மகனில் விசுவாசிக்கிற யாவருக்கும் நியாயத்தீர்ப்பு இல்லை. ஆனால் அவரை விசுவாசிக்காதவருக்கோ ஏற்கெனவே நியாயத்தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஏனெனில் அவர்கள் இறைவனுடைய ஒரே மகனின் பெயரில் விசுவாசம் வைக்கவில்லை. 19அந்த நியாயத்தீர்ப்பு என்னவென்றால்: உலகத்திற்குள் வெளிச்சம் வந்தது. மனிதர் வெளிச்சத்தை அல்ல, இருளையே விரும்பினார்கள். ஏனெனில் அவர்களது செயல்கள் தீயவைகளாய் இருந்தன. 20தீயசெயலைச் செய்கிற ஒவ்வொருவரும் வெளிச்சத்தை வெறுக்கிறார்கள். தமது தீய செயல்கள் வெளியரங்கமாகிவிடும் என்று அவர்கள் வெளிச்சத்திற்குள் வரமாட்டார்கள். 21ஆனால் சத்தியத்தின்படி வாழ்கிறவர்களோ வெளிச்சத்திற்குள் வருகிறார்கள். தமது செயல்கள் எல்லாம் இறைவனுக்குள்ளாகவே செய்யப்பட்டிருப்பதால், அது தெளிவாய்த் தெரியும்படி அவர்கள் வெளிச்சத்திற்குள் வருகிறார்கள் என்றார்.
இடுக்கமான வாசலும் அகன்ற வாசலும்
7:13“இடுக்கமான வாசல் வழியாக உள்ளே செல்லுங்கள். ஏனெனில் அழிவுக்கு செல்லும் வாசல் அகலமானது, வழியும் விரிவானது. பலர் அதன் வழியாகவே உள்ளே செல்லுகிறார்கள். 14ஆனால் இடுக்கமான வாசலும், குறுகலான வழியுமே வாழ்வுக்கு வழிநடத்துகின்றன. ஒரு சிலர் மட்டுமே அதைக் கண்டுபிடிக்கிறார்கள்.சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு கதையை உங்கள் சொற்களில் மீண்டும் சொல்லுங்கள். நீங்கள் அதை சத்தமாகப் பேச விரும்பலாம், அல்லது அதை எழுதிக்கொள்ளலாம். அதை நினைவில் கொள்ள சிரமப்படுகிறீர்கள் என்றால், அதை மீண்டும் படிக்கவோ கேட்கவோ செய்யுங்கள்.
நீங்கள் கதை பற்றி பரிச்சயமாக உணரும்போது, கீழ்க்கண்ட கேள்விகளை சிந்திக்க அல்லது விவாதிக்க சில நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
Get Discovery Bible Studies on your phone
Discover copyright ©2015-2026 discoverapp.org
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™. பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™, Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. “Biblica” என்பது Biblica, Inc. மூலம் யுனைடெட் ஸ்டேட்ஸ் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரை. அனுமதியுடன் பயன்படுத் தப் படுகிறது.